Aug 29

பிரான்ஸ் – பிரித்தானிய மீனவர்களிடையே கடல் நத்தைக்காக முற்றிய போராட்டம்!

பிரித்தானிய மீனவர்கள் மீது கற்கள், புகை குண்டுகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு தாக்கியமை தொடர்பாக பிரான்ஸ் மீனவர்கள் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. ஆங்கில கால்வாயில், ஸ்கோலொப்ஸ் எனப்படும் ஒரு வகை கடல் நத்தைகளை பிடிக்கும் போராட்டத்தில் இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர்.

பிரான்சுக்கு மேலாக சீன் விரிகுடாவில் – நோமன்டி கடற்கரைப் பகுதியிலிருந்து 12 கடல் மைல் தொலைவிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. எவ்வாறாயினும், ஆங்கில கால்வாயில்,, ஸ்கோலொப்ஸ் கடல் நத்தைகள் செறிந்துள்ள பகுதிகளில் அவற்றை பிடிப்பதற்கான சட்டரீதியான அனுமதியை பிரித்தானிய மீனவ படகுகள் கொண்டுள்ளன.

எனினும், அவர்களின் பிரசன்னம் காரணமாக கோபத்தில் உள்ள பிரான்ஸ், தங்கள் சுயநலத்துக்காக பிரித்தானியா வெட்கமின்றி கடல் வளங்களை நீர்த்துப் போகச் செய்வதாக குற்றம்சுமத்தியுள்ளது. எனவே, பிரித்தானியாவைச் சேர்ந்த மீனவர்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பை கோரியுள்ள நிலையில், பிரான்ஸ் ஒரு முதன்மை வளத்தை இழக்கும் சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது.

சுருக்கமாக கூற வேண்டுமானால், இது ஸ்கோலோப்ஸ்களுக்கான முற்றிய போராட்டமாக கருதப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு தொடக்கம் சுமார் 40 க்கும் மேற்பட்ட பிரான்ஸ் படகுகள் ஒன்று கூடி, பிரித்தானியாவின் கொள்கையடிப்புக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டன. இதன்போது அங்கு வந்த சில பிரித்தானிய படகுகளை தமது படகுகளைக் கொண்டு மோதியுள்ளனர்.