Aug 29

சவுதி மருத்துவப் பட்டதாரிகளுக்கு கனடாவில் கற்க அனுமதி

சவுதி அரேபியாவின் ஆயிரம் மருத்துவப் பட்டதாரிகள், தங்கள் பயிற்சியை கனடாவில் முடிப்பதற்கு சவுதி அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் புலமைப்பரிசில்களை பெற்று கல்வி கற்கும் சவுதி மாணவர்களை திருப்பியழைக்க சவுதி கல்வியமைச்சு அண்மையில் குறித்த மாணவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. சவுதியின் இந்த முடிவுக்கு சர்வதேச அளவில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை கனடாவில் தங்குவதற்கு அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசாங்கம் தீர்மானித்துள்ளதென அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது.

இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர முறிவுகளை அடுத்து, கனடாவில் கல்வி கற்றுவரும் மருத்துவ பட்டதாரிகளை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு காலக்கெடு வழங்கப்பட்டது. குறித்த காலக்கெடுவானது செப்டெம்பர் 22 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய கிழக்கில் பெண்களின் உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, ஒட்டாவா அரசு பதிவிட்ட டுவிட்டர் பதிவால், இரு நாடுகளுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், விமான சேவை போன்ற பல்வேறு சேவைகள் முடக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.