Aug 29

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக சமூகத்திற்கிடையே பேண்தகு தொலைநோக்கு பற்றிய கலந்துரையாடல் விரைவில்

பேண்தகு தொலைநோக்கு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதன் பின்னர் அந்த கருத்தாய்வினை முன்னோக்கி கொண்டுசெல்வதற்காக கல்விமான்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்காக பல்கலைக்கழகங்களை மையப்படுத்தி கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றது.


அத்துடன் இரண்டு சுற்றுக்களைக்கொண்ட இந்த கலந்துரையாடல் தொடரின் இரண்டாம் சுற்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகம், சபரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இந்த கலந்துரையாடல் இதுவரையில் இடம்பெற்றுள்ளதுடன் அதன்போது இலங்கை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற வகையில் எதிர்நோக்கும் சவால்களுக்கு மத்தியில் பேண்தகு கொள்கை உருவாக்கத்தின் போது கல்வி, போக்குவரத்து, விவசாயம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் காணப்படும் சவால்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் எதிர்கால பேண்தகு தொலைநோக்கு எவ்வாறு அமைய வேண்டும் என பொதுமக்கள், அரசியல்வாதிகள், கல்விமான்கள் உள்ளிட்ட சகல துறையினரிடையேயும் விரிவான கருத்தாய்வை ஏற்படுத்துதல் இந்த கலந்துரையாடலினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கலந்துரையாடலுக்காக பல்கலைக்கழக உபவேந்தர்கள், தேசிய பேண்தகு அபிவிருத்தி பற்றிய நிபுணர் குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் முனசிங்க உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் பங்குபற்றுவர்.

அத்துடன் பேண்தகு தொலைநோக்கு பற்றிய கலந்துரையாடல் தொடர் அமைச்சு மட்டத்தில் எதிர்வரும் வாரம் முதல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் முன்னிலையில் செய்த பிரகடனத்திற்கமைவாக 2030ஆம் ஆண்டளவில் இலங்கை பேண்தகு குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்கு ஏற்ப பயணிப்பதற்கு தேவையான தலைமை தற்போது பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜனாதிபதியால் இலங்கையின் 2030ஆம் ஆண்டிற்கான பேண்தகு அபிவிருத்தி தொலைநோக்கு பற்றிய முதல் வரைவினை தயாரிப்பதற்காக நோபல் பரிசு பெற்ற முதலாவதும் ஒரே இலங்கையரான பேராசிரியர் மொஹான் முனசிங்கவின் தலைமையிலான கல்விமான்கள், தொழில்சார் நிபுணர்கள் உள்ளிட்ட விசேட குழு நியமிக்கப்பட்டது.

ஒன்றுக்கொன்று வேறுபட்ட துறைகளை சார்ந்த மிகத் திறமையான விசேட நிபுணர்கள் 43பேரை கொண்டிருந்த அந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட பேண்தகு தொலைநோக்கு பற்றிய முதலாவது வரைவு 2018 ஜனவரி மாதம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கையரின் எண்ணங்களையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி எதிர்வரும் 12 வருடகாலத்திற்குள் நாட்டின் நீண்டகால பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் இலக்குகளை உறுதி செய்வதற்கான திட்டமொன்றினை உருவாக்குவதற்கான முதலாவது முயற்சி இது என்பதுடன், இந்த ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய கருத்தாய்வொன்றினை நிகழ்த்துவதன் முக்கியத்துவமும் ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது.

2030 பேண்தகு தொலைநோக்கு ஆவணத்தின் முதலாவது வரைபின் உள்ளடக்கம் தொடர்பாக மூன்று மாத காலமாக இடம்பெற்ற கலந்துரையாடலான தேசிய பேண்தகு கருத்தாய்வு ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அண்மையில் வெளியிடப்பட்டதுடன், இந்த கருத்தாய்விற்கமைய 2030ஆம் ஆண்டு வரையான பேண்தக அபிவிருத்தி கொள்கையை வரைவதற்கு ஒன்றிணைந்த தேசிய கோட்பாட்டை உருவாக்குவதற்காக பொதுமக்களின்பங்களிப்பு திருத்தம் செய்யப்படவுள்ளது.

2030ஆம் ஆண்டளவில் சுபீட்சமிக்க, போட்டித்தன்மையான, வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் பசுமைமிக்க, சௌகரியமான சூழலையும், ஒற்றுமை, சமாதானம் மற்றும் நீதியான சமூகத்தையும் கொண்ட பேண்தகு உயர், நடுத்தர வருமானம்பெறும் இந்து சமுத்திர நாடாக திகழ்தல் இலங்கையின் எதிர்பார்ப்பாகும். அத்துடன் வெவ்வேறு பிரிவுகளிலும் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதும், ஒரு நாடு என்ற வகையில் முன்னேற்றமடைவதற்கு தேவையான பாதையை உருவாக்குவதும் இந்த பேண்தகு தொலைநோக்கினூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகாரத்திற்கு வரும் சகல அரசாங்கங்களும் வெவ்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதிலும் அவை பூரண தேசிய அபிவிருத்தி திட்டத்திற்கமைய தயாரிக்கப்பட்டவையல்ல. ஒவ்வொரு அரசாங்கங்களும் இவ்வாறான அபிவிருத்தி ஆவணங்களை தயாரித்து இருந்தாலும் எவராலும் விமர்சனத்திற்கு உட்படுத்தாது அரசியல் தலையீடின்றி தத்தமது துறைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட முதலாவது அறிக்கை இதுவாகும்.