Aug 28

லட்சக் கணக்கில் நிதி முறைகேடு: பிரதமர் துறையில் 7 பேர் தடுத்து வைப்பு


புத்ராஜெயா, ஆகஸ்ட் 28 – கடந்த பொதுத் தேர்தலுக்காக வைக்கப்பட்டிருந்த பணத்தை கையாடியதாக பிரதமர் துறையைச் சேர்ந்த ஓர் உயர் அதிகாரி உட்பட 7 அரசாங்க அதிகாரிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் பிரதமர் துறையின் ஆய்வுப் பிரிவில் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான இவர்களில் ஒருவர் ‘டத்தோ’ அந்தஸ்து கொண்ட துணைத் தலைமை இயக்குனர் ஆவார்.

இவர்களில் அந்தத் துணைத் தலைமை இயக்குனர் மட்டும் எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் கைது செய்யப்பட்டார். மற்றவர்கள் அவர்களின் அலுவலகங்களில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரையும் செப்டம்பர் முதல் தேதி வரை அதாவது 5 நாள்களுக்குத் தடுத்துவைக்க, போலிஸ்காரருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த எழுவரும் பல லட்ச கணக்கான ரிங்கிட்டுகளை மோசடி செய்ததாக கூறப்பட்டது.

இதனிடையே பிரதமர் துறையில் பணிபுரிந்த பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட மற்றொரு குழு, தேர்தலுக்காக வைக்கப்பட்டிருந்த பணத்தில் 35 லட்சம் ரிங்கிட்டை கையாடல் செய்ததாக அண்மையில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.