Aug 28

குற்றச்சாட்டுக்களை மறுத்து விசாரணை கோரினார் டான்ஸ்ரீ பாலா

ஜொகூர் பாரு, ஆக.28- ரிம.6.01 மில்லியன் ரொக்கத்தை மோசடி செய்ததாக மஇகா கட்சியின் முன்னாள் உதவித் தலைவரான டான் எஸ்.பாலகிருஷ்ணன் தம்மீது சுமத்தப்பட்டுள்ள இரு குற்றச்சாட்டுகளை மறுத்து, விசாரணை கோரினார்.

சட்டவிரோத நடவடிக்கைகள் வாயிலாக கிடைக்கப்பெற்ற அத்தொகையை சின்னய்யா & சன்ஸ் மற்றும் தனது சொந்த நிறுவனத்தின் வாயிலாக பாலகிருஷ்ணன் மோசடி செய்தார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.

ஜொகூர் பாருவிலுள்ள அஃபீன் வங்கியின் கிளை வங்கியில் 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12-ஆம் தேதியன்றும், 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதியன்றும், அவர் அக்குற்றங்களை புரிந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டது.

பணமோசடி எதிர்ப்புச் சட்டத்தின் 4(1) (a) பிரிவின் கீழும், பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் எதிர்ப்புச் சட்டம் மற்றும் அம்லா எனப்படும் பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பெறப்படும் பணத்திற்கு எதிரான சட்டங்களின் கீழ் பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளார்.

அவர் மீது சுமத்தப் பட்டுள்ள குற்றங்களை செவிமடுத்தப் பின்னர், அக்குற்றங்களை மறுப்பதாக செஷன்ஸ் நீதிமன்றத்தின் நீதிபதி ஜைலானி ரஹ்மான் முன்னிலையில் அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து,‘அம்லா’ சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப் பட்டுள்ளதால், அவ்வழக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்குக் மாற்றப் பட வேண்டும் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில், அவ்வழக்கை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிமதி ஜைலானி அனுமதி வழங்கினார். இவ்வழக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப் படும் என்று நீதிபதி அறிவித்தார். பாலகிருஷ்ணனின் தரப்பில் வழக்கறிஞர்கள் டத்தோ வி.மனோகரன் மற்றும் என்.யுகேந்திரா ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.