Aug 28

எல்லை நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்ய பிரதமர் தலைமையில் குழு!!!

மாகாண சபை தேர்தல் முறைமை குறித்தும் எல்லை நிர்ணயம் குறித்தும் மீளாய்வு செய்யும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐவர் கொண்ட குழுவினை சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று நியமித்தார்.


2017 இன் 17 இலக்க மாகாண சபை திருத்தச்சட்டமூலத்தின் 4 (12) சரத்தின் பிரகாரம் சபாநாயகர் ஐவர் கொண்ட குழுவினை நியமித்துள்ளார்.

இக் குழுவின் தலைவராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுவதுடன் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க, பெரியசாமி முத்துலிங்கம், பேராசிரியர் மகாசுந்தரம் பிள்ளை, ஏ.எச்.எம் நவுபல் ஆகியோரையே மீளாய்வு குழுவுக்காக சபாநாயகர் பெயரிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறைமை புதிய முறைமைக்கு கொண்டு வரப்பட்டதனை போன்று மாகாண சபைகளிலும் புதிய முறைமையை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து வருகின்றன. இதன்படி மாகாண சபைக்கான புதிய தேர்தல் முறைமையின் படி  50 வீதம் தொகுதி வாரியாகவும் 50 வீதம் விகிதாசார முறைமையின் ஊடாகவும் உறுப்பினர்களை தெரிவு செய்யும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும் எல்லை நிர்ணய விவகாரத்தில் பெரும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

கனகரத்னம் தவலிங்கம் தலைமையிலான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை மீது சிறுபான்மை கட்சியினர் மாத்திரமின்றி பெரும்பான்மை கட்சிகளும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன. சிங்களவர்கள் சிறுபான்மையாக வாழும் பகுதிகளில் பெரும்பான்மை இனத்திற்கு அநீதி இழைக்கப்பட்டமை இந்த எதிர்ப்புக்கு காரணம் என்று கூறலாம்.

இந் நிலையில் மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய குழு அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட்டு வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டு எதிரணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆகியன எதிர்த்து வாக்களித்தன. மேலும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியனவும் எதிராகவே வாக்களித்தன. எனினும் மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இதன்படி 139 பேர் எதிராக வாக்களித்ததுடன் ஆதரவாக எவரும் வாக்களிக்கவில்லை.

எல்லை நிர்ணய அறிக்கை சபையில் தோல்வியுற்றால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐவர் கொண்ட குழுவொன்றை நியமிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ஏற்கனவே இணக்கம் ஏற்பட்டது.

இதன்விளைவாக 2017 இன் 17ஆம் இலக்க மாகாண சபை திருத்தச்சட்டமூலத்தின் 4 (12) சரத்தின் அதிகாரத்தின் பிரகாரம் சபாநாயகர் ஐவர் கொண்ட குழுவினை இன்று  நியமித்துள்ளார்.

இக் குழுவின் அறிக்கை இரு மாதங்களில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும். இந்த இரு மாதங்களுக்குள் அறிக்கை கையளிக்கப்பட்டால் ஜனவரி மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.