Aug 27

இத்தாலியில் தரையிறங்கிய புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு திருச்சபை ஆதரவு!

கடந்த ஐந்து நாட்களாக இத்தாலியில் தரையிறங்கவிடாது தடுத்து வைக்கப்பட்டு தற்போது உள்நுழைய அனுமதிக்கப்பட்டுள்ள 150 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் ஆதரவு வழங்கும் விடயத்தில் கத்தோலிக்கத் திருச்சபை அதிக பங்களிப்பு வழங்குவதாக பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

அயர்லாந்து விஜயத்தினை நிறைவுசெய்துவிட்டு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ரோம் திரும்பிய பாப்பரசர் பிரான்சிஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆபிரிக்க நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக இத்தாலி எல்லைக்குள் புகுந்த சுமார் 150 புகலிடக்கோரிக்கையாளர்களை தரையிறங்க இத்தாலி மறுத்ததால், கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக கடலிலேயே அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வேண்டுகோளிற்கிணங்க இத்தாலி இந்த நடைமுறையை பின்பற்றியது. இந்நிலையில், அவர்களில் சிலரை மாத்திரம் தரையிறக்கி எஞ்சியவர்களை மீண்டும் திருப்பியனுப்புமாறு ஐரோப்பிய ஒன்றியம் அறிவுறுத்தியது.

எனினும், நீண்ட நாட்கள் கடலிலேயே பயணித்த குறித்த புகலிடக்கோரிக்கையாளர்களில் சிலரின் உடல்நலம் மிகவும் குன்றியுள்ளதால் அவர்களுக்கு உடனடி சிகிச்சை தேவையென வைத்திய ஆலோசகர்கள் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, இத்தாலி அரசாங்கம் அவர்கள் அனைவரையும் நேற்று தரையிறக்கியது.

இந்நிலையில், 150 புகலிடக் கோரிக்கையாளர்களில் அல்பானியா 20 புகலிடக்கோரிக்கையாளர்களையும் அயர்லாந்து 20-25 புகலிடக்கோரிக்கையாளர்களையும் எஞ்சியோரை இத்தாலியின் வத்திக்கான் திருச்சபை பொறுப்பேற்பதாகவும் இத்தாலி உள்துறை அமைச்சர் மெட்டியோ சல்வினி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புகலிடக்கோரிக்கையாளர்களைத் திருப்பி அனுப்புவதென்பது மிக ஆபத்தான விடயமாகும். ஆட்கடத்தல்காரர்களிடம் அவர்கள் சிக்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. எனவே திருப்பியனுப்பும் விடயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென பாப்பரசர் பிரான்சிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.