Jun 07

கனடாவுக்கான துரித குடிநுழைவு முறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன - அமைச்சர்

கனேடிய மத்திய அரசாங்கம் கனடாவுக்கான துரித குடிநுழைவு முறைகளில் மாற்றங்களை செய்துள்ளது.

மார்க்கம் நகரில் உள்ள குடிவரவாளர்களுக்கான நிலையத்தில் வைத்து, குடிவரவுத்துறை அமைச்சர் அஹ்மட் ஹூசென் இந்த மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதுவரை நடப்பில் உள்ள துரித குடிநுழைவுத் திட்டத்தின் கீழ், குடிநுழைவுக்காக விண்ணப்பிப்போருக்கு, அவர்களின் கல்வித் தகைமை, வேலை முன் அனுபவம், மொழித் தேர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் 1,200 புள்ளிகள் வரையில் வழங்கப்படுகிறது.

இந்த  நிலையில் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் அடிப்படையில், இன்று செவ்வாய்க்கிழமையில் ( ஜூன் 6)  இருந்து, இவ்வாறான விண்ணப்பதாரிகளின் சகோதரர்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராகவும் , கனடாவில் நிரந்தர வதிவுரிமை  அல்லது கனேடிய குடியுரிமை கொண்டவர்களாகவும் இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு மேலதிகமாக 15 புள்ளிவகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரிகளுக்கு சிறந்த பிரஞ்சு மொழித் தேர்ச்சி இருந்தால் அவர்களுக்கு மேலதிகமாக 30 புள்ளிகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொழித் தேர்ச்சிக்கான இந்த மேலதிக புள்ளிகள், ஆங்கில மொழித் தேர்ச்சிக்கும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக இவ்வாறான விண்ணப்பதாரிகள் கனடாவின் தொழில் வங்கியில் பதிவு செய்தவர்களாக இருக்க வேண்டும் அலலது பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக இருந்துவந்தது. எனினும் இன்றில் இருந்து அது அவர்களின் விருப்பத் தேர்வாக அனுமதிக்கப்படுகிறது.