Aug 27

உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதில் பெருமை: பிரதமர் மோடி

உலகின் பழைமையான மொழி தமிழ் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அதனையிட்டு இந்திய தேசமே பெருமை கொள்கின்றதென கூறியுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பாகிய ‘மன் கி பாத்’  நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த நிகழ்ச்சியில் தொடர்ந்தும் பேசிய பிரதமர் மோடி,

“உலகிலேயே பழைமையான மொழி தமிழ் என்பதில் தேசமே பெருமை கொள்கிறது. சமஸ்கிருதம் நமது கலாசாரத்துடன் இணைந்தது. அது இந்தியாவின் உயர்ந்த மொழி. ஆகவே சமஸ்கிருத வாரத்தை முன்னிட்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

அத்துடன் ஆசிரியர்களே நமது எதிர்காலத்தை வடிவமைக்கின்றனர். ஆசிரியர்கள் விலைமதிப்பற்றவர்கள். அதேபோன்று அறிவும் விலைமதிப்பற்றது. ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

சோகமான நேரத்தில் கேரளாவுக்கு ஆதரவாக அனைத்து மக்களும் உள்ளனர். இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் மீண்டு வர வேண்டிக் கொள்கிறோம். இயற்கை சீற்றங்கள் பேரழிவை ஏற்படுத்தினாலும், மக்களிடம் ஒற்றுமையை கொண்டு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது.

கேரளாவில் உண்மையான கதாநாயகர்களாக முப்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள், மக்களை காப்பாற்ற உதவும் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடவில்லை. கேரளா மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேபோன்று, நல்ல நிர்வாகத்தை அறிமுகப்படுத்திய மறைந்த முதல்வர் வாஜ்பாயை, நாடு என்றும் நினைவில் வைத்திருக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு உண்மையான பங்களிப்பை அளித்துள்ளார்.

இதேவேளை, பெண்களுக்கு எதிராக நடக்கும் எந்த அநீதியையும் சமூகம் பொறுத்துக் கொள்ள முடியாது. இதனை கருத்தில் கொண்டுதான் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் குற்றச்செயல் திருத்தச்சட்டமூலத்தில் மாற்றம் செய்யப்பட்டது.

இதேவேளை, முத்தலாக் சட்டமூலம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நேரத்தில், முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக தேசம் உள்ளது. அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வேன்” என பிரதமர் குறிப்பிட்டார்.