Aug 27

சம்பந்தனின் சாணக்கிய அரசியலை தோற்கடிக்க பல காக்கைவன்னியர்கள்!

சம்பந்தனின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கிய போராட்டத்தினையும் தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கைவன்னியர்கள் தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

நேற்று  முல்லைத்தீவு கற்சிலை மடுவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆம் ஆண்டு வெற்றிநாள்  நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.


அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.,

மாவீரன் பண்டாரவன்னியனின் நாளில் தமிழன் தலைவணங்கான் என்ற செய்தியினை பேரினவாத அரசியல் வாதிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

மாவீரன் பண்டார வன்னியன் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வாழ் எடுத்து போராடிய வேளையில் கூலிப்படைகளாகவும் நவீன ஆயுதங்களுடன் இருந்த கூலிபடைகளை ஓடிஓடி முல்லை கோட்டைக்குள் ஒளித்த வரலாற்று நிகழ்வு மாவீரன் பண்டாரவன்னியனின் வீரச்செயலை காக்கவன்னியன் காட்டிக்கொடுப்பால் எமக்கு ஏற்பட்டது முதலாவது சாபக்கேடு.

அதனை தொடர்ந்து தமிழினத்தின் விடிவிற்காக ஆயுதப்போராட்டம் பரிணமித்த அன்று சர்வதேசமே நடுங்குகின்ற வகையில் பல்வேறு படைஅணிகளை நகர்த்தி சென்ற எமது ஆயுதப்போராட்டமும் காட்டிக்கொடுக்கின்ற காக்கைவன்னியர்களின் வலைப்பின்னலாலேதான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்து.

இன்று எங்கள் சம்மந்தன் ஜயாவின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கிய போராட்டத்தினையும் தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கைவன்னியர்கள் தடம்புரண்டு நடப்பதை நடப்பதில்லை என்று கூறுவதும் இல்லாததை உள்ளது என்று கூறுவதுமாக பல காக்கை வன்னியர்கள் அந்த வழிதோன்றல்களாக தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள்.

எம் மக்களே நாங்கள் சரி எது பிழை எது என்று சிந்திக்கின்ற காலத்தின் விழிம்பில் நிக்கின்றோம் எங்கள் மக்கள் மீது எதுவித அக்கறையும் இல்லாமல் இந்த மக்களுக்கு என்ன பொறிமுறைகளை அவர்கள் வைத்துக்கொண்டு இந்த அரசியல் சாணக்கியத்தை குழப்புகின்றார்கள்.

இந்த பண்டாரவன்னியன் மண்ணிலே இன்று நான்கூறுகின்றேன் இந்த மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய ஒரு காலம் விரைவில் வரும் இதனை உரக்க கூறுகின்றேன் .

மக்களின் விடிவிற்காக சுய சிந்தையோடு சிந்திக்கின்ற பண்டார வன்னியர்களை அடையாளம் காணுங்கள் காக்கை வன்னியர்களை காலால் உதைத்து தள்ளுங்கள் இந்த இடத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கின்ற பொழுதுதான் எங்களின் இழப்புக்கள் வலிகள் வடுக்களுக்கான விடிவினை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் இந்த மண்ணின் விடுவிற்காக தங்கள்  உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் சாம்பல் மேட்டில் இருந்து நான் இந்த செய்தியினை உரத்துக்கூறுகின்றேன் எமக்கென்று நாமும் விதிசெய்வோம் நாம் நிம்மதியாக வாழ வழிவகுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.