Aug 27

திரிவேணி சங்கமத்தில் அஸ்தி கரைப்பு குமரியில் வாஜ்பாய்க்கு நினைவு மண்டபம்: பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் பிரதமர்  வாஜ்பாய் அஸ்தி தமிழகத்தில் குமரி, சென்னை உள்பட  6 இடங்களில் கரைக்கப்பட்டது. குமரி திரிவேணி  சங்கமத்தில் மத்திய அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன், அஸ்தி கலசத்தை தலையில் சுமந்து சென்று கரைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘‘2004ல்  இந்தியாவின் வடக்கு , தெற்கு பகுதியை இணைப்பதற்கு கன்னியாகுமரியில் தங்க நாற்கர சாலை திட்டத்தை அப்போது பிரதமராக இருந்த  வாஜ்பாய் தொடங்கி வைத்தார்.

அந்த திட்டம் தொடங்கிய பகுதியில், வாஜ்பாய்க்கு  நினைவு மண்டபம் அமைப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும். வாஜ்பாய் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று அஞ்சலி செலுத்தினார்.

 சென்னையில் நடந்த அஞ்சலி நிகழ்ச்சியிலும்  அவர் கலந்து கொண்டார். தமிழகத்தில் இப்போது தான் முதலமைச்சரும்,  எதிர்க்கட்சி தலைவரும் கட்சி பாகுபாடின்றி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் வாஜ்பாய் அஸ்தி கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில், கடலில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட்டது. வைகையிலும் அவரது அஸ்தி கரைக்கப்பட்டது.