Aug 27

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவை சீரமைக்க மலையாளிகள் ஒரு மாத சம்பளத்தை வழங்கவேண்டும்: பினராய் விஜயன் வலியுறுத்தல்

திருவனந்தபுரத்தில் நேற்று கே்ரள முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் தற்போது 1,435 நிவாரண முகாம்கள் செயல்படுகின்றன. இதில் 4,62,456 பேர் உள்ளனர்.

ஆகஸ்ட் 8ம் தேதி முதல் இன்று (நேற்று) வரை 302 பேர் இறந்துள்ளனர். வெள்ளம் புகுந்த வீடுகளை தூய்மையாக்கும் பணிகள் உள்ளாட்சி அமைப்புகள் மேற்பார்வையில் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 3 லட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் துப்புரவு செய்யப்பட்டுள்ளன. ஓணம் விடுமுறைக்கு பின்னர் 29ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

பள்ளிகளில் செயல்பட்டு வரும் நிவாரண முகாம்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படும். வெள்ளத்தில் பலியான கால்நடை மற்றும் பறவைகளின் உடல்கள் புதைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3 லட்சத்து 64 ஆயிரம் கோழிகள் உள்ளிட்ட பறவைகள், 3,285 பசுக்கள் போன்ற பெரிய விலங்குகள் புதைக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் கேரளாவுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. புதிய கேரளாவை உருவாக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.உலகின் பல பகுதியில் வசிக்கும் மலையாளிகள் கேரளாவை சீரமைக்க முன் வரவேண்டும். அனைவரும் ஒரு மாத சம்பளத்தை தர முன்வரவேண்டும். அதை முழுவதுமாக கொடுக்க முடியாது என்பதால் மாதத்திற்கு 3 நாள் சம்பளம் என்ற அடிப்படையில் 10 மாதங்கள் வழங்கலாம் என்றார்.