Aug 25

வியாழேந்திரன் பேசுவது இனவாதம்? கிஸ்புல்லா செய்தது பாரிசவாதமா?



புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலை குறித்து இனவாதக்கருத்துக்களை முஸ்லீம் அமைச்சர்கள் விதைத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

புல்லுமலையில் அண்மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது தெரிவித்த கருத்துக்கள் தற்போது சூடுபிடித்துள்ளன.

எதிர்வரும் 3ம் திகதி புல்லுமலை தொழிற்சாலைக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் ஏட்டிக்குப் போட்டியான இனவாதக் கருத்துக்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது.

அமைச்சர் கிஸ்புல்லா அவர்கள் வாழைச்சேனை கோயிலை இடித்து அதில் சந்தை அமைத்தது என்பது இனவாதமா? அல்லது பாரிச வாதமா? என பாராளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சமூகத்தின் காணிகள் வாழ்வாதாரம் வளங்களை பாதுகாப்பதற்காக போராட்டங்களை நடத்தும் போது அதனை இனவாதமாக சித்தரித்து எங்களை முடக்குகின்ற செயற்பாடுகளை முஸ்லீம் தலைவர்கள் முன்னெடுக்கின்றனர்.

எங்களை இனவாதியாக சித்தரித்துக் காட்டி பிரச்சினைகளை திசைதிருப்ப பார்க்கின்றனர் அதற்கு எமது சில தமிழ் தலைமைகளும் துணைபோகின்றனர்.

ஆனால் கிஸ்புல்லா போன்ற அமைச்சர்கள் இனவாதமாக பேசியது மட்டுமல்லாது வாழைச்சேனை கோயிலை இடித்து அதில் சந்தையும் அமைத்துக்காட்டியதுடன் அதனை வெளிப்படையாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அப்படியானால் எது இனவாதம் நாங்கள் செய்வது இனவாதம் என்றால் கிஸ்புல்லா அவர்கள் செய்தது என்ன பாரிசவாதமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.