Aug 25

கேரள வெள்ள நிவாரணத்திற்கு ஏழு கோடி வழங்கும் ஆப்பிள்

கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சிக்கி பேரழிவை சந்தித்து மெல்ல மீண்டு வரும் கேரள மாநிலத்திற்கு ரூ.7 கோடி நிவாரணம் வழங்குவதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. 

கேரள மாநிலத்தை வரலாறு காணாத கனமழை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்ற நிலையில், மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் கேரளாவுக்கு ரூ.7 கோடி வழங்குவதாக முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அறிவித்துள்ளது.

“கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் மனமுடைந்து போனோம். ஆப்பிள் சார்பாக கேரள முதல்வர் பொது நிவாரண நிதி கணக்கு மற்றும் மெர்சி கிராப்ஸ் இந்தியா எனும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.7 கோடி வழங்கப்படுகிறது. இந்த நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், வீடு இழந்தோருக்கு புதிய வீடுகள், மற்றும் பள்ளிக் கூடங்களை கட்ட உதவியாக இருக்கும்,” என ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கம், ஆப் ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஸ்டோர் உள்ளிட்டவற்றில் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு உதவ பிரத்யேக பேனர்களை பதிவிட்டுள்ளது. பல்வேறு இற்கை பேரிடர்களுக்கு நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் பலமுறை ஐடியூன்ஸ் ஸ்டோர் மற்றும் ஆப் ஸ்டோர்களை பயன்படுத்தி இருக்கிறது.

ஆப்பிள் வாடிக்கையாளர்கள் மெர்சி கிராப்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு 5, 10, 25, 50, 100 அல்லது 200 டாலர்கள் வரை நிதி வழங்கலாம் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

கேரள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 417 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.