Aug 25

நஃப்டாவில் இருதரப்பு பேச்சுவார்த்தை! – கனடா எதிர்ப்பு

நஃப்டாவில் இருதரப்பு ஒப்பந்தம் தொடர்பான மீள் பேச்சுவார்த்தையினை மேற்கொள்வதற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் செயற்படுகின்ற நிலையில், அதற்கு கனடா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக மெக்சிகோ பொருளாதார அமைச்சர் இலிடஃபொன்சா குவார்ஜாடோ தகவல் வெளியிட்டுள்ளார்.

வட அமெரிக்கா சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மீள் பேச்சுவார்த்தையினை மேற்கொண்டு அமரிக்கா-மெக்சிகோ இருதரப்பு வர்த்தகத்தினை  முன்னெடுக்க தீவிரமாக உழைப்பதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள பிணக்குகளை நீக்கிய வண்ணமுள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) மெக்சிகோ பொருளாதார அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாநிலத்தில் உருக்குக் கைத்தொழில் மையத்திற்கு விஜயம் செய்திருந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிரிஷ்டியா ஃபிரீலான்ட், இவ்விடயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நஃப்டா என்பது அமெரிக்கா, மெக்சிகோ மட்டுமன்றி கனடாவும் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பாகும். இந்நிலையில், மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கிய நஃப்டா அமையத்தின் வர்த்தக பேச்சுவார்த்தையை மூன்று நாடுகளும் இணைந்தே முன்னெடுக்க வேண்டும். குறித்த வர்த்தக ஒப்பந்தம் மூன்று நாடுகளுக்கு மத்தியில் செயற்படுத்துவதே நியாயமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.