Aug 25

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஏற்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு.

கிழக்கில் பொதுச்சின்னத்திலேயே தமிழ் கட்சிகள் அனைத்தும் போட்டியிட வேண்டும், அதற்கு சம்மதிக்காத கட்சிகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் தாம் பிரசாரம் செய்வோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர் த.கோபாலகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தை தவிர்த்து வேறு சின்னத்தில் கிழக்கில் போட்டியிடுவதற்கு தாம் தயார் இல்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கோரிக்கைகள் தொடர்பில் கிழக்கில் உள்ள தமது கட்சித்தலைவர்களே முடிவெடுப்பார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் தாம் இணையப்போதில்லை என தமிழரசுக்கட்சியும் ரெலோவும் தெரிவித்திருக்கின்றன.

கிழக்கு தமிழர் ஒன்றியம் தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோவின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான கோவிந்தன் கருணாகரம் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் எமக்கு நம்பிக்கை இல்லை என பதிலளித்தார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளராக இருக்கும் கோபாலகிருஷ்ணனின் பிரதானமான நோக்கம் தமிழ் கட்சிகளை இணைத்து தான் செயலாளராக இருக்கும் தமிழர் மகாசபை என்ற கட்சியின் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டு பிள்ளையானை கிழக்கு மாகாண முதலமைச்சராக்குவதாகும். அவர்களின் சுயநல செயற்பாட்டிற்கு நாம் ஆதரவளிக்க முடியாது என கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

கடந்த பொதுத்தேர்தலில் தமிழர் மகாசபை கோபாலகிருஷ்ணன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அவர்கள் பெற்றுக்கொண்ட மொத்த வாக்கு 401ஆகும். மக்களால் நிராகரிக்கப்பட்ட தமிழர் மகாசபை போன்ற கட்சிக்கு வெள்ளையடித்து அங்கீகாரம் கொடுப்பதற்கும் தாண்டுபோன கப்பலை மீட்பதற்கும், பிள்ளையானை மீண்டும் முதலமைச்சராக்குவதற்கும் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் பலிக்கடாவாக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற கட்சியாகும். கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 401 வாக்குகளை மட்டும் பெற்ற தமிழர் மகாசபை போன்ற உதிரி கட்சிகளின் தலைமையின் கீழ் அவர்களின் சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைந்து கொள்ளுமாறு எப்படி கேட்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.

கிழக்கு தமிழர் ஒன்றியம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை தயாரித்து அதில் அனைத்து கட்சிகளையும் கையொப்பம் இடுமாறு வலியுறுத்துவோம் என்றும் அதற்கு இணங்காத கட்சிகளை நிராகரிக்குமாறு மக்களிடம் பிரசாரம் செய்வோம் என கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் இறுதியாக நடந்த கூட்டத்தில் தெரிவித்திருக்கிறாரே என கோவிந்தன் கருணாகரம் அவர்களிடம் கேட்ட போது கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் காலம் காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்து வந்திருக்கிறார்கள்.

கடந்த பொதுத்தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பிரசாரம் செய்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் 401தான். எனவே அவர்களின் எதிர்பிரசாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாதிக்கப்போவதில்லை என தெரிவித்தார்.

எதிர்காலத்தில் கிழக்கு தமிழர் ஒன்றியம் நடத்தும் எந்த கூட்டத்திலும் ரெலோ கலந்து கொள்ளாது. இந்த நிலைப்பாட்டில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளும் உள்ளன என அவர் தெரிவித்தார்.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் இறுதிக் கூட்டத்தில் 11 தமிழ் கட்சிகள் கலந்து கொண்டன. பொதுத்தேர்தலிலோ அல்லது மாகாணசபை தேர்தலிலோ இந்த 11 கட்சிகளுக்கும் சமமான தொகுதி ஒதுக்கீடுகள் எவ்வாறு வழங்க முடியும். இந்த 11 கட்சிகளில் பெரும்பாலான கட்சிகள் மக்கள் செல்வாக்கற்ற 100 வாக்குகளை கூட பெற முடியாதவை என அவர் தெரிவித்;தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தில் இணையப்போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி தமிழரசுக்கட்சி தலைவருமான பா.அரியநேத்திரம் அவர்களிடம் கிழக்கு தமிழர் ஒன்றியம் பற்றி தொடர்பு கொண்டு கேட்ட போது தமிழர்களின் ஒற்றுமை தான் எமது இலக்கு. இதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

வடக்கு கிழக்கு என்ற பேதம் இன்றி ஈழத்தமிழர்கள் அனைவரும் ஒரே அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் பலமான சக்தியாக திகழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாம் செயற்பட்டு வருகிறோம். இதனை நான் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் கூட்டத்தில் தெளிவாக கூறியிருக்கிறேன் என அரியநேத்திரம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு என தமிழர்களை பிரிப்பதற்கோ தமிழ் மக்களின் அரசியல் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து பலவீனப்படுத்துவதற்கோ நாம் துணைபோக முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் ஒரு சின்னத்திலும் கிழக்கில் ஒரு சின்னத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது. வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமான வீட்டு சின்னத்திலேயே நாம் அனைத்து தேர்தல்களையும் சந்திப்போம் என அவர் தெரிவித்தார்.