Aug 25

வடமாகாணக் கல்வி அமைச்சரால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிட முடிவு!

வடமாகாணக் கல்வி அமைச்சால் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் பணிக்கமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் 3 வருட சேவைக்காலத்தை அவர்களது பணிக்காலத்துடன் சேர்த்துக் கணக்கிடப்படாது அநீதி இழைக்கப்பட்டுள்ளமையால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடத் தீர்மானித்துள்ளார்கள்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்டதற்கமைவாக பாடசாலைகளில் ஆசிரியர்களாகச் சேவையாற்றிய தமது 3 வருட சேவைக் காலத்தை வடமாகாணக் கல்வி அமைச்சு தமது சேவைக் காலத்துடன் சேர்த்துக்கொள்ளாது சேவைக் காலம் கணக்கிடப்பட்டுள்ளதாகவும் இதனால் தாமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால், வடமாகாண முதலமைச்சர், கல்வி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்தவர்களிடம் பலதடவைகள் முறையிட்ட போதிலும் தமது கோரிக்கைகளை ஏற்றுத் தமக்கு நீதி வழங்குவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் அவர்களால் எடுக்கப்படாது தமது நியாயமான கோரிக்கையை உதாசீனம் செய்து காலங்கடத்தப்பட்டு வருகின்றமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துத் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்டித் தமது நியாயமான கோரிக்கையை முன்வைத்தபோது, வடமாகாணத்தில் இப்படியொரு பிரச்சினை இருப்பதாகவே தனக்குத் தெரியாது எனவும் இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தி விரைவில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு அறிவிப்பதாகக் கூறப்பட்ட போதிலும் நீண்ட காலமாகியும் அவரிடமிருந்து எந்தவொரு அறிவித்தலும் தமக்குக் கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணக் கல்வி அமைச்சினால் கடந்த 2013.07.01 இல் ஆசிரியர் பணிக்காக நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களின் சேவைக் காலத்தைக் கணக்கிடும் போது அவர்கள் சேவையாற்றிய 3 வருட சேவைக் காலத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது 2016.08.01 இல் இருந்து பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக அவர்களின் சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளமையால் அவர்களின் பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களின் பின்னர் சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களை இவர்களின் முன்னர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்களாகக் கருதுகின்றமையும் பாதிக்கப்பட்டவர்களை மென்மேலும் பாதிப்படைய வைப்பதாகவே அமைவதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடவுள்ளனர்.

இவ்விடயம் குறித்து வடமாகாணக் கல்வி அமைச்சரது ஆசிரியர்களுக்கான நடமாடும் சேவையில் கல்வி அமைச்சரிடம் கூறப்பட்ட போது அப்போது உங்களுக்கு நியமனம் வழங்கிய அரசாங்கம் வேறு இப்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் வேறு இவ்விடயத்தை எதுவும் செய்ய முடியாது எனக் கூறப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் குறித்து தெற்கிலுள்ள மத்திய அமைச்சர்கள் சிலரிடம் முறையிட்டபோது இது ஒரு சிறிய விடயம் இதனை வடமாகாணசபை செய்ய முடியும் எனக் கூறப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.

வடமாகாணக் கல்வி அமைச்சால், 3 வருட சேவைக் காலம் சேர்த்துக்கொள்ளப்படாது பாதிக்கப்பட்டவர்களாக 400 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் அனைவரும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், போன்ற வன்னிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.