Aug 25

பதக்கம் இன்றி வெளியேறிய இலங்கை பளுதூக்கல் வீரர்கள்

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா மற்றும் பாலம்பேர்க்கில் நடைபெற்று வரும் 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்றுள்ள இலங்கை அணிக்கு இதுவரை எந்தவொரு பதக்கமும் கிடைக்கில்லை.

அதிலும் குறிப்பாக, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் குறைந்தபட்சம் இரண்டு பதக்கங்களையாவது வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பளுதூக்கல் போட்டியில் பங்குபற்றியிருந்த நான்கு வீரர்களும் எந்தவொரு வெற்றியும் இன்றி நாடு திரும்பவுள்ளனர்.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை தேசிய கொடியை ஏந்திச் சென்றவரும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான பளுதூக்கலில் வெண்கலப் பதக்கத்தை வென்றவருமான தினுௗஷா கோமஸ், கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தார்.

ஜகார்த்தாவில் உள்ள ஜே.ஐ எக்ஸ்போ அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் 48 கிலோ கிராம் எடைப் பிரிவில் கலந்துகொண்ட தினுௗஷா, மூன்று தடவைகள் ஸ்னெச் முறையில் 67 கிலோ கிராம் எடையைத் தூக்கத் தவறியதால் முதல் சுற்றுடன் வெளியேறினார்.

இதேநேரம், நேற்று (21) நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்கலில் 62 கிலோ கிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட இலங்கையின் திலங்க விராஜ் பலகசிங்க, ஸ்னெச் முறையில் முறையே 122, 122 மற்றும் 125 கிலோ கிராம் எடைகளை தூக்குவதற்கு மேற்கொண்ட 3 முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவி போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான பளுதூக்கலில் 53 கிலோ கிராம் எடைப் பிரிவிற்காக ‘ஏ’ குழுவில் போட்டியிட்ட சமரி வர்ணகுலசூரிய, ஒட்டுமொத்தமாக 169 கிலோ கிராம் எடையைத் தூக்கி 10ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

குறித்த போட்டியில், ஸ்னெச் முறையில் 73 கிலோ கிராம் எடையைத் தூக்கிய அவர், கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் முதல் முயற்சியில் 96 கிலோ கிராம் எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனை படைத்தார்.

இந்நிலையில் ஆசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் இலங்கை அணியின் கடைசி எதிர்பார்ப்பாக அமைந்த ஆண்களுக்கான 69 கிலோ கிராம் எடைப்பிரிவு பளுதூக்கலில் இலங்கையின் இந்திக சதுரங்க திசாநாயக்க கலந்துகொண்டார்

இப்போட்டியின் ‘பி’ குழுவில் 8 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் ஸ்னெச் முறையில் தனது முதல் முயற்சியில் 130 கிலோ கிராம் எடையைத் தூக்கிய இந்திக, 2ஆவது மற்றும் 3ஆவது முயற்சிகளில் 134 கிலோ கிராம் எடையைத் தூக்குவதில் தோல்வியடைந்தார். எனினும், ஸ்னெச் பிரிவின் இறுதியில் ஐந்தாவது இடத்தை அவர் பெற்றிருந்தார்.

இதனையடுத்து கிளீன் அன்ட் ஜேர்க் முறையில் முதலிரண்டு முயற்சியிலும் 155 கிலோ கிராம் எடையைத் தூக்குவதில் தோல்வியைத் தழுவிய அவர், இறுதியாக 160 கிலோ கிராம் எடையைத் தூக்குவதிலும் தோல்வி கண்டார். இதன்படி, ‘பி’ குழுவில் இறுதி இடத்தைப் பெற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 69 கிலோ கிராம் எடைப்பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.