Aug 24

வடமேல் கால்வாயின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தின் ஆரம்பமும் வடமேல் கால்வாயின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சற்றுமுன்னர் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. பொல்பிட்டிகம கும்புகுலாவ குளத்தருகில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

2400 கிராமிய குளங்களை புனரமைப்பு செய்யும் எல்லங்கா குளக் கட்டமைப்பு செயற்திட்டம் என்பது உலர் வலயத்தில் தற்போது செயழிலந்து காணப்படும் எல்லங்கா குளக்கட்டமைப்பினை மீண்டும் புனரமைப்பு செய்து அப்பிரதேச மக்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும்.

இலங்கையின் கிராமங்களை மையப்படுத்திய நீர்ப்பாசன தொழில்நுட்பமான எல்லங்கா கிராமிய குளக்கட்டமைப்பு முறை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் பற்றிய அமைப்பினால் உலகின் முக்கியமான விவசாய மரபுரிமையாக இனங் காணப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கே உரித்தான இந்த பாரம்பரிய விவசாயத் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்நாட்டின் விவசாயத்துறையையும் விவசாய பொருளாதாரத்தையும் புத்துயிர் பெறச் செய்யும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இச்செயற்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் மாத்திரம் 300 குளங்கள் புனரமைப்பு செய்யப்படவுள்ளதுடன், பொல்பிட்டிகம, கும்புகுலாவ குளத்தின் புனரமைப்பு செயற்பாடுகளை ஆரம்பிப்பதன் ஊடாக இந்த செயற்திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படுகின்றது.