Aug 24

பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம் - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிர்வாகிகள் மத்தியில் உருக்கமாக பேசியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

செயற்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், ‘மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றியை நாடாளுமன்ற தேர்தலில் பெற்றுத் தந்தார். 37 தொகுதிகளில் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்து, வரலாறு படைத்தார். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அது தான் ஜெயலலிதாவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அதற்காக நான் உள்பட மூத்த நிர்வாகிகள் பதவியை துறக்க தயார்’ என்று பேசியதாக தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பல்வேறு அரசியல் பணிகள், கட்சி பணிகள், எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் சந்தித்து வெற்றி பெறும் வியூகம், ஜெயலலிதா வகுத்து தந்த அந்த வெற்றிப் பாதையில் பயணிப்பது இவைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசித்தோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கையில் சுணக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே?.

பதில்:-தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு 6 மாதத்தில் 1.22 கோடி உறுப்பினர்களை பெற்ற மாபெரும் இயக்கம் அ.தி.மு.க. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- செயற்குழு கூட்டத்தில் நீங்கள் என்ன பேசினீர்கள்?.

பதில்:- எந்த நோக்கத்துடன் அ.தி.மு.க. எனும் இயக்கத்தை எம்.ஜி.ஆர். உருவாக்கினாரோ, அந்த நோக்கம் குன்றாமல் 29 ஆண்டு காலம் பொதுச்செயலாளராக இருந்து கட்சியை வழி நடத்தியவர் ஜெயலலிதா. அவர் தேடித்தந்த அந்த வெற்றியை, தக்க வைத்துக்கொள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைத்து செயல்படவேண்டும் என்பதே கூட்டத்தில் நான் பேசியதின் சுருக்க உரை.

கேள்வி:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி மூத்த நிர்வாகிகள் தங்கள் பதவிகளை துறந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று நீங்கள் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறதே?

பதில்:- யூகமான கேள்விகளுக்கு என்னிடம் இருந்து பதில் வராது.

கேள்வி:- அ.தி.மு.க.வில் வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்று கூறி ஒரு வருடம் ஆகியும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையே?

பதில்:-வழிகாட்டு குழு அமைப்பதற்கான கால நிர்ணயம் இப்போது வரை செய்யப்படவில்லை. நேரம் வரும்போது அது தானாக அமையும்.

கேள்வி:-அ.தி.மு.க.வின் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் என்னவாக இருக்கும்?

பதில்:-ஜெயலலிதாவின் நல்லாட்சி தான் தற்போதும் தொடருகிறது. அவரது திட்டங்கள் மக்களுக்காக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதால், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும்.

கேள்வி:-அ.தி.மு.க. எத்தகைய கூட்டணியை அமைக்கும்?

பதில்:- எங்களோடு இணைந்து வருகிற தேசிய கட்சிகள் என்றாலும் சரி, மாநில கட்சிகள் என்றாலும் சரி, அவர்களுடன் இணைந்து தேர்தல் பணிகளை சந்திப்போம்.

கேள்வி:-பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்க வாய்ப்பு உண்டா?

பதில்:-பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்படும்போது முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.