Aug 23

‘நிறவெறி பிடித்தவர்’ என கூறி சர்ச்சையில் சிக்கிய கனடா பிரதமர்

சட்டவிரோத குடியேற்றம் குறித்து விமர்சித்த பெண்ணை ‘நிறவெறி பிடித்தவர்’ எனக் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்க எல்லையை அடுத்திருக்கும் கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் உள்ள சப்ரிவாய்ஸ் நகரில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டார்.

அப்போது அந்தக் கூட்டத்தில் நின்றிருந்த ஒரு பெண், அமெரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவோரால் தங்களது மாநிலத்திற்கு ஏற்படும் இழப்பை மைய அரசு தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

சகிப்பின்மையை ஏற்க முடியாது என மேடையில் இருந்த படியே பதிலளித்து விட்டு கீழே இறங்கிய ஜஸ்டின் ட்ரூடோவை வழிமறித்த அந்தப் பெண், மீண்டும் தனது கருத்தை கூறினார். இந்நிலையில் ட்ரூடோ நிறவெறிக்கு இங்கு இடமில்லை என பதிலளித்துள்ளார்.

அவரது இந்தப் பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் கனடாவின் வலது சாரி இயக்கத்தினர், அரசின் மீதான விமர்சனத்தை பொறுப்பற்ற வார்த்தைகளால் ஜஸ்டின் ட்ரூடோ ஒடுக்கப்பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.