Aug 23

மதரசா அங்கீகாரம் ரத்து: தேசிய கீதத்துக்கு தடை எதிரொலி

சுதந்திர தினத்தில், மாணவர்களை தேசிய கீதம் பாட விடாமல் தடுத்த, மதரசா பள்ளியின் அங்கீகாரத்தை, உ.பி., அரசு ரத்து செய்துள்ளது.

உ.பி., மாநிலத்தின் மஹராஜ்கஞ்ச் பகுதியில், முஸ்லிம் மத போதனைகளை அளிக்கும், மதரசா பள்ளி உள்ளது. இதில், மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில், சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாட, மாணவியருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மாவட்ட சிறுபான்மையினர் துறை அதிகாரி, பிரபாத் குமார், அந்த மதரசாவுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். பின், அந்த மதரசாவுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, அவர் பரிந்துரை அளித்தார்.

இதையடுத்து, அந்த மதரசாவின் அங்கீகாரத்தை ரத்து செய்து, உ.பி., அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும், மதரசாவின் முதல்வர் உட்பட மூவருக்கு எதிராக, தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.