Aug 23

ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தைக்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட தலிபான், நிராகரித்த ஆப்கானிஸ்தான் அரசு

ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த தேவையான உதவிகளை ரஷியா செய்யும் என அறிவிப்பு வெளியானது. இதற்காக அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் மற்றும் தலிபான் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை கூட்டத்தை மாஸ்கோவில் நடத்தவுள்ளதாக ரஷியா அறிவித்தது.

ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் இல்லை என ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு இடையிலான பிரச்சனைகளை இரண்டு தரப்புமே நேரடியாக பேசி தீர்த்துக்கொள்ளும் இதில், மூன்றாவது நபரின்(நாட்டின்) தலையீடு தேவையில்லை என அந்நாடு ரஷியாவிற்கு தெரிவித்துள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு அழைக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் வேண்டுமானால் ஆக்கப்பூர்வமாக பங்கேற்க தலிபான் அமைப்புக்கு ரஷியா அழுத்தம் கொடுக்க முயற்சிக்கலாம் என கூறி ரஷியாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.

இதற்கிடையே, ரஷியாவின் அமைதி பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள தலிபான்கள் அந்த கூட்டத்திற்கு தங்களது தரப்பின் மூத்த உறுப்பினரை அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களுக்கு ரஷியா வான்வழி உதவிகளை வழ்ங்கி வருகிறது என சமீபத்தில் அமெரிக்க தளபதி ஒருவர் குற்றச்சாட்டை கூறியிருந்த நிலையில் இந்த அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா முயன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.