Aug 22

இரு துருவங்கள் இணையப் போகும் அதிசயம்!!

வட கொரியா - தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.இதுதொடர்பாக, தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சர் சாங் - யூங் - மூ அந்நாட்டு நாடாளு மன்றத்தில் நேற்று உரையாற்றுகையில்,

வட கொரியா - தென் கொரியா இடையே நீண்டகாலமாக நிலவி வந்த கசப்புணர்வு தற்போது படிப் படியாக குறைந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் தொடர்பாக இரு நாட்டு அதிபர்களும் கடந்த ஏப்ரலில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, அமைதி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வட கொரியா - தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதிகளில் அமைந்திருக்கும் ராணுவ நிலைகளை மூடுவதற்கு இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.

அதன்படி, இந்த ராணுவ நிலைகள் பரஸ்பரம் படிப்படியாக வாபஸ் பெறப்படும். முதலில் ஒரு கி.மீ. தொலைவு வரை அமைந்திருக்கும் ராணுவ நிலைகள் மூடப்படும் என அவர் தெரிவித்தார். வடகொரியா, தென்கொரியா இடையே மூத்த ராணுவ தளபதிகள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திவருகின்றனர்.

அதன்படி அடுத்த மாதம் இருநாடுகளுக்கும் இடையே புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.