Aug 22

டொனல்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்!

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹென் (வயது-51), தான் சட்டத்தை மீறியதாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்துக்காக பயன்படுத்திய நிதி தொடர்பாக மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையின் போதே அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரின் உத்தரவுக்கு அமைய தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டே தாம் இவ்வாறு செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

டொனால்ட் ட்ரம்புடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்களுக்கு ரகசியமாக நிதி வழங்கியமை தொடர்பாக மைக்கல் கோஹென் சாட்சியம் அளித்திருந்தார். அவர் வரி மற்றும் வங்கி மோசடி உட்பட எட்டு குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதேவேளை, நேற்று மேற்கு வேர்ஜினியாவுக்கு சென்றிருந்த அமெரிக்கா ஜனாதிபதியிடம், மைக்கல் கோஹென் பற்றி கேட்கப்பட்ட போது அவர் அந்த கேள்வியை புறக்கணித்துள்ளார். அத்துடன் வௌ்ளை மாளிகையும் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு மறுத்துள்ளது.

ட்ரம்பின் முன்னாள் பிரசார தலைவர் பால் மனாபோர்ட் மீது, வங்கி மற்றும் வரி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு, வர்ஜீனியாவிலுள்ள அலெக்ஸாண்டிரியா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்தே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.