Aug 22

மழை வெள்ளத்தால் வரலாறு காணாத சேதம்: குடகில் மீட்பு - நிவாரண பணிகள் தீவிரம்

மழை வெள்ளத்தால் வரலாறு காணாத அளவுக்கு சேதமடைந்துள்ள குடகில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரமாகியுள்ளன. விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் உணவு, மருத்துவ பொருட்கள் குடகிற்கு கொண்டுவரப்பட்டன.

குடகு மாவட்டத்தில் மழை நின்றுள்ளதால், மீட்பு பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவசூர், கல்லூர் பகுதியில் ஆபத்தான இடங்களில் சிக்கியிருந்த 67 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். முக்கொட்லு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கியிருந்த 38 பேர், வனப்பகுதி வழியாக தப்பி வந்து திதிமதி கிராமத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

குடகில் இடைவிடாது கொட்டி தீர்த்த கனமழையால், மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,800 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்வேறு கிராமங்கள் மற்றும் நிவாரண முகாம்கள் இரவு நேரங்களில் இருளில் தான் இருக்கின்றன. இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் மின் பிரச்சினையை சரி செய்யும் பணியில் செஸ்காம் (சாமுண்டீஸ்வரி மின்சார வாரியம்) சார்பில் 18 குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை அப்புறப்படுத்தி, புதிய மின்கம்பங்களை நடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து செஸ்காம் ஜூனியர் என்ஜினீயர் ராம்தாஸ் கூறுகையில், குடகு மாவட்டத்தில் மின்பாதையை சரி செய்யும் பணியில் ஏராளமான ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுண்டிகொப்பா மண்டலத்தில் பணிகள் முடிவடைந்து விட்டதால், மாதாபுரா நிவாரண முகாமிற்கு மின் வினியோகம் செய்ய உள்ளோம். இந்த பகுதியில் தான் அதிகபட்சமாக 150 முதல் 200 மின்கம்பங்கள் வரை சாய்ந்துள்ளன என்றார்.

குடகு மாவட்ட போலீசாரும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். 3 இடங்களில் ஹெலிகேமராக்கள் மூலம் தேடி வருகிறார்கள். இந்த நிலையில், குடகு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 9 பேர் மாயமாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நிவாரண முகாம்களில் உள்ள மக்கள் உடைமைகளையும், உறவுகளையும் இழந்து தவித்து வருகிறார்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு தற்காலிகமாக அலுமினிய கொட்டகை அமைத்து கொடுக்கவும், ஒரு குடும்பத்துக்கு தலா ரூ.3,800 வழங்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் குடகு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவித்யா நேற்று மழை சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர், நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு வேறு பகுதியில் நிரந்தரமாக வீடு கட்டி கொடுக்க மாநில அரசு இடங்களை தேர்வு செய்து வருவதாகவும், இதனால் யாரும் ஆதங்கப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

குடகு மாவட்டத்தில் உள்ள 41 முகாம்களிலும் நேற்று சுகாதார துறை சார்பில் மருத்துவ முகாம் நடந்தது. மழை நின்றுள்ளதால், மக்களை தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் இருக்க முகாம்களில் தங்கி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. மேலும் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மாநில சுகாதார துறை மந்திரி சிவானந்த பட்டீல், நிவாரண முகாம்களுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர், மக்களுக்கு அனைத்து வகையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று சுகாதார துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் நேற்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான ‘எம்.ஐ.-17’ ரக 2 விமானங்கள் நேற்று குடகிற்கு வந்தன. அந்த விமானங்கள் குசால்நகரில் உள்ள ஹாரங்கி அணை பகுதியில் வந்திறங்கின. அந்த விமானங் களில் இருந்து உணவு மற்றும் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வந்தன.

பின்னர் அதிகாரிகள், ஹெலிகாப்டர்களில் சென்று குடகு மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனால், குடகு மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், இந்திய விமான படை வீரர்கள் இணைந்து நிவாரண பணிகளையும், மீட்பு பணிகளையும் தீவிரமாக செய்து வருகிறார்கள். விமான படை ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வீசப்பட்டன.