Aug 22

தவறான தகவலின் பேரில் நடந்த சம்பவம் - காவற்துறை அறிவிப்பு

தவறான தகவலின் காரணமாகவே காவல்துறை விசேட அதிரடிப் படையினரால், களுத்துறையில் வைத்து பாணந்துறை மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொள்ளைச் சம்பவம் ஒன்றுக்கு தயாராகின்றமை தொடர்பில் பாணந்துறை மோசடி தவிர்ப்பு பிரிவு காவல்துறை பரிசோதகரும், காவல்துறை அலுவலர்கள் இருவரும் நேற்று பிற்பகல் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் முன்னதாக தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும், சம்பவம் தொடர்பான தவறான தகவலின் காரணமாக, காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பின்னர் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த மூன்று காவல்துறை அதிகாரிகளும், நேற்று பிற்பகல் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேநேரம், சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மேலும் 5பேரில் மூன்று பேர் நாளைவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மற்றுமொருவர் காவல்துறையினரின் பாதுகாப்பில் களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், மேலும் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.