Jun 06

துருக்கியிலுள்ள ஜேர்மனிய துருப்புக்கள் மீளப்பெறப்படுவர்: சிக்மார் கேப்ரியல்

துருக்கியின் இன்சர்லிக் விமானத் தளத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஜேர்மனிய துருப்புக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளதாக ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் சிக்மார் கேப்ரியல் (Sigmar Gabriel) தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிக்மார் கேப்ரியல் அங்கு ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்சர்லிக் விமானத் தளத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டமைக்கான காரணம் துருக்கியின் உள்நாட்டு அரசியல் காரணங்களே என எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்சர்லிக்கில் உள்ள படைவீரர்களை மீளப்பெற நாம் தீர்மானித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

துருக்கி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் பல்வேறு காரணங்களால் படிப்படியாக விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.