Aug 22

நீச்சல், கபடி மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் இலங்கை ஏமாற்றம்

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சலில் கலந்துகொண்ட இலங்கை வீரர்களான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க சகோதரர்கள் முதல் சுற்றுடன் ஏமாற்றம் அளித்தனர்.

இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங்கில் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழா 3ஆவது நாளாகவும் நேற்று இடம்பெற்றது. இதில் இலங்கை வீரர்கள் நீச்சல், குத்துச்சண்டை, கபடி, வுூஷு, கூடைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர்.

இந்நிலையில் நேற்றுக் காலை நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் சாதாரண நீச்சல் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க மற்றும் கைல் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன் ஆறாவது தகுதிச் சுற்றில் கலந்துகொண்ட மெதயூ அபேசிங்க, 22.88 வினாடிகளில் போட்டித் தூரத்தை கடந்து 5ஆவது இடத்தையே பிடித்தார்.

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட மெத்யூ அபேசிங்க, 22.65 வினாடிகளில் போட்டியை நீந்தி முடித்து தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும், அந்தப் போட்டியிலும் மெத்யூ அபேசிங்கவுக்கு 8ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதேநேரம், 50 மீற்றர் சாதாரண நீச்சலின் ஏழாவது தகுதிகாண் சுற்றில் இலங்கை சார்பாக கலந்துகொண்ட கைல் அபேசிங்க, போட்டியை 23.36 வினாடிகளில் நீந்தி 8ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதன்படி, 51 வீரர்கள் கலந்துகொண்ட தகுதிகாண் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 12ஆவது மற்றும் 20 ஆவது இடங்களைப் பெற்று அடுத்த சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டனர்.

இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டிகளுக்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெத்யூ அபேசிங்க, போட்டிகளின் முதல் நாளான கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற ஆண்களுக்கான 200 மீற்றர் சாதாரண நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு (1:50:97 செக்.) 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதே போட்டிப் பிரிவின் 2ஆவது தகுதிச் சுற்றில் பங்குபற்றிய மற்றுமொரு இலங்கை வீரரான கவிந்திர நுகவெல, 1:56:01 வினாடிகளில் போட்டியை நிறைவுசெய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

எனினும், ஒட்டுமொத்த நிலையில் இவ்விரு வீரர்களும் 6ஆவது மற்றும் 26ஆவது இடங்களைப் பெற்றுக்கொண்டதால் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர்.

இதேநேரம், ஆண்களுக்கான 200 மீற்றர் வண்ணத்துப்புூச்சி நீச்சல் போட்டியில் கலந்துகொண்ட சிரன்ந்த டி சில்வா, போட்டியை 2:05:90 வினாடிகளில் நிறைவுசெய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் அனைவரது கவனத்தையும் பெற்றுக்கொண்டவரும், இந்தோனேஷியாவில் தற்போது உயர்தரப் பரீட்சைக்கு முகங்கொடுத்து வருகின்ற இளம் நீச்சல் வீரருமான அகலங்க பீரிஸ் திங்கட்கிழமை (20) நடைபெற்ற ஆண்களுக்கான 50 மீற்றர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் பங்குபற்றியிருந்தார். குறித்த போட்டியை 26.57 வினாடிகளில் நிறைவுசெய்த அவர், 4ஆவது இடத்தைப் பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகும் வாய்ப்பை தவறவிட்டார்.

இது இவ்வாறிருக்க, இம்முறை ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை நீச்சல் வீரர்கள் பங்குபற்றவுள்ள கடைசிப் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது. ஆண்களுக்கான 4-100 சாதாரண நீச்சல் அஞ்சலோட்டத்தில் 2ஆவது தகுதிகாண் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள மெத்யூ அபேசிங்க தலைமையிலான இலங்கை அணி, பதக்கமொன்றைப் பெற்றுக்கொடுக்கும் நம்பிக்கையுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே இலங்கை ஆடவர் அணி பங்கேற்ற கூடைப்பந்து போட்டியில் 14 – 21 என்ற புள்ளிகள் அடிப்படையில் சீனாவிடம் இலங்கை அணி தோல்வியை சந்தித்தது. அதேபோன்று தாய்லாந்துடனான போட்டியிலும் இலங்கை ஆடவர் அணி தோல்வியடைந்தது.

கபடிப் போட்டியிலும் இலங்கை மகளிர் அணி நேற்று அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை சந்தித்தது. பலம்மிக்க இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 12 – 38 என தோற்ற இலங்கை அணி பங்களாதேஷிடமும் தோல்வியை சந்தித்தது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் சீனா தங்கப்பதக்கங்களை அள்ளி தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. சீனா மொத்தம் 23 தங்கப்பதக்கங்களை வென்றிருப்பதோடு 15 வெள்ளி மற்றும் 11 வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 49 பதக்கங்களை வென்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜப்பான் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.