Jun 06

பரிஸ் உடன்படிக்கையில் இருந்து கனடா பின்வாங்காது: ஜஸ்ரின் ரூடோ

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பிலான 2015ஆம் ஆண்டு பரிஸ் உடன்படிக்கையிலிருந்து கனடா ஒருபோதும் பின்வாங்காது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த பிரதமர், “சூழல் வெப்பமடைவதன் காரணமாக உலகிற்கு ஏற்படக்கூடிய தீங்கை எதிர்கொள்வதற்கான தைரியம் உலக நாடுகளுக்கு இருக்க வேண்டும். அதனை எதிர்கொள்வதற்கு தைரியமாகவும், நம்பிக்கையுடனும் செயற்படுபவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராடும் உறுதிப்பாட்டிலிருந்து கனடா ஒருபோதும் பின்வாங்காது. இவ்விடயத்தில் நாம் தனிமைப்படுத்தப்படவில்லை. உலக நாடுகள் எம்முடன் கைக்கோர்த்துள்ளன.

அத்துடன், காலநிலை மாற்றத்தின் யதார்த்தத்திலிருந்து நாம் ஒருபோதும் வெளியேற முடியாது” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.