Aug 21

பத்திரிகையாளர் மீதான பயணத் தடைகளை அகற்றியது துருக்கி: ஜேர்மன் வரவேற்பு

ஜேர்மனிய பத்திரிகையாளர் மெசாலே டொலு (Mesale Tolu) மீதான பயணத் தடைகளை துருக்கி அகற்றியமை தொடர்பாக ஜேர்மனி வௌிவிவகார அமைச்சர் ஹெய்கோ மாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

துருக்கி – ஜேர்மன் உறவுமுறை சரியான திசையில் செல்வதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்த செயற்பாடு இன்னமும் போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜேர்மனிய பெண் பத்திரிகையாளர் மீதான பயணத் தடைகள் தொடர்பான முடிவுகளை துருக்கி நேற்று (திங்கட்கிழமை) மாற்றிக் கொண்டது.

பயங்கரவாத அமைப்புடன் குறித்த பெண் பத்திரிகையாளர் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், அவர் மீதான விசாரணைகளுக்காக காத்திருப்பதாகவும், அதன் காரணமாக பயணத் தடையை விதிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.

குறித்த பத்திரிகையாளர் எட்டு மாத கால தடுப்புக்காவலின் பின்னர் டிசம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதிலிருந்து பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக அவரது டுவிட்டர் கணக்கை மேற்கோள்காட்டி ஜேர்மனிய ஊடகங்கள் வௌியிட்டிருந்த செய்தியை வௌிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

துருக்கியின் கடந்தகால கைதுகள் தொடர்பில் ஜேர்மனி கண்டனம் தெரிவித்த பின்னர் நேட்டோ பங்காளிகளான இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் வலுவிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.