Jun 06

உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக லண்டனில் ஊர்வலம்

லண்டனில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் ஆத்ம சாந்திக்காக, ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

தேம்ஸ் நதிக்கரையில் நேற்று (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட குறித்த ஊர்வலத்தில் சுமார் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வித்தியாசம் இன்றி மழையையும் பொருட்படுத்தாது உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பலர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

லண்டனின் முதலாவது முஸ்லிம் மேயரான சாதிக் கானும் குறித்த ஊர்வலத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதன்போது உரையாற்றிய மேயர் சாதிக், “அப்பாவி பொதுமக்களைக் குறிவைத்து மதுபான சாலைகள் மற்றும் உணவு விடுதிகளில் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகள் வெறுக்கத்தக்கவர்கள்” என தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது. குறித்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிலர் இதய வடிவில் அமைந்த பலூன்களை ஏந்திச் சென்றதாகவும் மேலும் சிலர் “வெறுப்பு எங்களை பிரித்து விடாது” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.