Aug 21

தேசிய மட்டத்தில் சாதனைகள் படைக்கும் கிழக்கின் ஆஸீக்

மெய்வல்லுனர் போட்டிகளில் அண்மைக்காலமாக கிழக்கு மாகாணத்திற்கு தேசிய மட்டத்தில் பதக்கங்களைப் பெற்றுக்கொடுத்துவரும் அம்பாரை மாவட்டம் நிந்தவுர் பிரதேசத்தைச் சேர்ந்த இஸட். ரீ.எம்.ஆஸீக் கடந்த வாரம் நிறைவு பெற்ற 96வது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஸிப் போட்டியில் ஆண்களுக்கான பரிதி வட்டத்தில் 45.21 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை இராணுவத்திற்காக போட்டிகளில் பங்கடுத்து வருகின்ற இஸட். ரீ.எம்.ஆஸீக் 45.21 மீற்றர் தூரம் எறிந்ததன் மூலம் தனது சொந்த சாதனைப் பெறுதியைப் பெற்றுள்ளார். குறித்த போட்டியில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட கயான் ஜயவர்த்தன 56.40 மீற்றர் தூரத்தை எறிந்து புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

2016 இடம்பெற்ற 94 ஆவது தேசிய மெய்வல்லுநர் சம்பியன்சிப் போட்டியில் இலங்கை இராணுவத்தின் சார்பில் கலந்து கொண்ட இஸட். ரீ.எம். ஆஸீக் பரிதுவட்டம் நிகழ்ச்சியில் 43.77 மீற்றர் தூரம் எரிந்து தங்கப்பதக்கத்தினைப் பெற்றிருந்தார்.

கடந்த 2017ம் வருடம் மாத்தறை கொடவில விளையாட்டரங்கில் நடைபெற்ற 43வது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய இஸட். ரீ.எம்.ஆஸீக் பரிதுவட்டம் நிகழ்ச்சியில் 42.97 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தைப் பெற்றிருந்தார். அது மட்மல்ல இவ்விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்திற்கு முதலாவது தங்கப்பதக்கத்தையும் ஆஸீக் வென்று கொடுத்திருந்தமை விசேட அம்சமாகும்.

அதேபோன்று கடந்த 2016ம் ஆண்டு யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தின் சார்பில் கலந்து கொண்டு இஸட். ரீ.எம்.ஆஸீக் பரிதுவட்டம் நிகழ்ச்சியில் 42.34 மீற்றர் தூரம் எறிந்து தங்கப்பபதக்கத்தையும், குண்டு போடுதலில் 13.78 மீற்றர் பெறுதியில் வெள்ளிப்பதக்கத்தையும் பெற்றிருந்தார்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வீரா் ஒருவர் இரண்டு போட்டிகளில் பதக்கம் பெறுகின்ற வாய்ப்பு ஆஸீக்கிற்கு கிடைத்தது.