Aug 21

கிருஷ்ணா கொலையுடன் தொடர்புடைய உளவாளியின் தற்போதைய நிலை!


கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணி கட்சியின் தலைவருமான கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தனின் கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 09 ஆம் திகதி, காலை 7.45 மணியளவில் கொழும்பு செட்டியார்தெரு ஆண்டிவால் சந்தியிலுள்ள பழக் கடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கிருபானந்தன் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர், நேற்று காலை 10.00 மணியளவில் ப்ளூமெண்டல் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சந்தேகநபர், கொலை இடம்பெறுவதற்கு முன்னர் கிருஷ்ணாவின் நடமாட்டம் தொடர்பில் உளவு பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

33 வயதான குறித்த சந்தேகநபர், கொலை செய்வதற்கு பயன்படுத்திய, மோட்டார்சைக்கிளையும் பொலிசார் மீட்டுள்ளனர். கொழும்பு 13, ப்ளூமெண்டல் வீதியில் வசிக்கும் அவர், கொலைச் சம்பவத்திற்கு உதவி புரிந்தமை மற்றும் திட்டமிட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில், இன்று புதுக்கடை, இலக்கம் 03ல் உள்ள நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.