Aug 21

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.1 கோடி பொருட்கள்: விஜயகாந்த் அறிவிப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:  கேரள மக்கள் இயற்கையின் சீற்றத்தினால் வரலாறு காணாத கன மழையால்  பெருமளவு பாதிக்கப்பட்டு அனைத்து பொருட்களையும் இழந்து நிற்பதை பார்க்கும்பொழுது என் மனம் வேதனையாக உள்ளது.

கேரள முதல்வர் பினராயி  விஜயன் நிவாரண நிதியாக ரூ.8 ஆயிரம் கோடி தேவை. உடனடி தேவையாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை  வைத்தார்.முதல்கட்டமாக, ரூ.100 கோடி கேரள மாநிலத்திற்கு நிவாரண நிதியாக அறிவித்தது. 

பிரதமர் நரேந்திரமோடி வெள்ளத்தால் பாதித்த அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். கேரள மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்வதுடன்,  மத்திய அரசின் நிதியாக 2ம் கட்டமாக ரூ.500 கோடி அறிவித்திருக்கிறது.

கேரள மாநிலத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக  ஒதுக்கிட வேண்டும். மேலும் தேமுதிகவின் அனைத்து மாவட்டம்  சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் (1 கோடி ரூபாய்  மதிப்புள்ள பொருட்கள்) கேரள மாநிலத்திற்கு வருகிற 24ம் தேதி அனுப்பி வைக்கப்படும்.