Aug 21

ரபேல் விவகாரத்தில் ராகுல் தவறான தகவல் : அனில் அம்பானி

ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தவறான தகவல் அளித்து வருவதாக தொழிலதிபர் அனில் அம்பானி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, ராகுலுக்கு, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி கடிதம் எழுதியுள்ளார். அதில் அனில் அம்பானி குறிப்பிட்டுள்ளதாவது, ரபேல் போர்விமான தயாரிப்பில் ரிலையன்ஸ் நிறுவனமோ அல்லது ரிலையன்ஸ் நிறுவனம், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்தோ செயல்படவில்லை. ரபேல் விவகாரத்தில் நடைபெற்றதாக எழுந்த முறைகேட்டில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தொடர்பில்லை. 

இந்தியாவின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட 36 ரபேல் விமானங்களும் பிரான்சிலேயே 100 சதவீதம் தயாரிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் தயாரிக்கப்பட்ட பின்னர் அவை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் தயாரிப்புச் செலவில் ஓரு ரூபாய் கூட ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு இல்லை.

ஆனால், இவ்விவகாரத்தில்,ராகுல் தொடர்ந்து தவறான தகவல்களையே அளித்து வருகிறார். இதன்மூலம், அவரை சில பன்னாட்டு நிறுவனங்கள் அவரை தவறான பாதைக்கு வழிநடத்தி செல்வது புலனாவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.