Aug 20

புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபையில் கடும் கண்டனம்!

தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கான வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களை புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை தொடர்பில் மாநகரச பையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.


யாழ் மாநகர சபையின் அமர்வு இன்று யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

இதன்போது, நினைவுத் தூபி அமைப்பதற்காக மாநகர சபை பொறிளியலாளர் ஊடாக நியமிக்கப்பட்ட 3 ஊழியர்களுக்கு புலனாய்வுப் பிரிவினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும், அதனால் அந்தப் பணி இடை நிறுத்தப்பட்டதாகவும் தெரியவந்ததையடுத்து மாநகர சபையின் உறுப்பினர் பார்த்தீபன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டிருந்தார்.

ஆதன்பிரகாரம், வேறு ஊழியர்களின் உதவியுடன் வேலி அமைக்கும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளன.

ஆனால், இவ்வாறான அச்சுறுத்தல் சம்பவங்கள் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய உறுப்பினர்கள், சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர உறுப்பினர் பார்த்தீபன் ஏனைய உறுப்பினர்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.

அவ்வாறு அறிவித்திருந்தால், அந்த இடத்திற்கு வந்து ஒத்துழைப்பு வழங்கியிருக்க முடியும் என சக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனையுடன் சுட்டிக்காட்டினர்.