Aug 20

ஆயிரம் ரூபா நாணயத்தாளால் ஏற்படவுள்ள சிக்கல்!

சட்டவிரோதமான முறையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டுவந்த, இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அநுராதபுரம், கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பிரதேசத்திலுள்ள துருணேகல கொலணியில் வசிக்கும் 20 மற்றும் 23 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கலன்பிந்துனுவெவ பொலிசார் தெரிவித்தனர். குறித்த பிரதேத்திலுள்ள வீட்டில் ஹெரோயின் போதைப்பொருள் காணப்படுவதாக கலன்பிந்துனுவெவ பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது அங்கு ஹெரோயின் காணப்படவில்லை எனத் தெரிவித்த பொலிசார், ரூபா 1,000 பெறுமதியான போலி நாணயத்தாள்கள் 70,000, ரூபாவையும் அதனை அச்சிடப் பயன்படுத்திய அச்சு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போது, சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி நாணயத்தாள்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த ஆயிரம் ரூபா தாள்கள், S|206 510942 எனும் இலக்கத்தை கொண்டது என தெரிவித்த பொலிசார், சந்தேகநபர்களால் மிக நீண்ட நாட்களாக போலி நாணயத்தாள் அச்சிடும் சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கலன்பிந்துனுவெவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.