Aug 20

இத்தாலி அனர்த்தம் – உயிரிழப்பு எண்ணிக்கை 43 ஆக உயர்வு

இத்தாலியின் வடமேற்கு பகுதியான ஜெனோவா நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிலிருந்து மூன்று உடல்களை மீட்டுள்ளனர். அவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களே பாலம் உடைந்து வீழ்ந்த அனர்த்தத்தில் காணாமல் போன இறுதி நபர்கள் என கருதப்படுகிறது. குறித்த பகுதியில் தீயணைப்பு படையினர் தொடர்ந்தும் பணியில் ஈடுபட்டு வரும் காட்சிகள் வௌியாகியுள்ளன.

மிக நெரிசலான போக்குவரத்து பாதையாக இருந்த மொரன்டி பாலத்தின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்த விபத்தில் பல வாகனங்கள் 45 மீட்டர் உயரத்திலிருந்து வீழ்ந்து நொருங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த அசம்பாவிதம் இத்தாலியின் கட்டுமானத்துறை தொடர்பாக கடுமையான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், விபத்தின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு பாலத்தின் நிர்மாணத்தை மேற்கொண்ட நிறுவனம் நட்டஈடுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.

அதேவேளை, அனர்த்தம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அரசாங்கம் விசேட ஆணைக்குழுவொன்றையும் ஸ்தாபித்துள்ளது.