Aug 20

10 ஆண்டுகளின் பின் அதிகரிக்கும் புகையிரத கட்டணம்..!!

ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத கட்டணங்களை அதிகரிக்க போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.


அதற்கான வர்த்தமானி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளதாக குறித்த அமைச்சின் செயலாளர் பீ.எஸ் விதானகே தெரிவித்துள்ளார்.

புதிய புகையிரத கட்டண திருத்தத்தின் அடிப்படையில் 15 % ஆல் புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கட்டண திருத்தம் தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த திருத்தத்தின் போது குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2008 ஆம் ஆண்டிற்கு பிறகு புகையிரத கட்டணத்தில் திருத்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.