Aug 20

கடலில் 10 மணி நேரம் தத்தளித்த பெண்ணை காப்பாற்றிய கடற்படை

நோர்வே பயணிகள் கப்பலிலிருந்து கடலில் விழுந்த பிரிட்டன் பெண் ஒருவர் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். குரேஷியா நாட்டு கடல் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்கரோலாவிலிருந்து வெனீஸ் நோக்கி சென்று கொண்டிருந்த கப்பல் அட்ரியாட்டிக் கடற்பகுதியில் பயணித்த போது கேய் லாங்க்ஸ்டாஃப் என்ற பெண் கப்பலின் கூரை பகுதிக்கு ஏறியுள்ளார்.

நள்ளிரவு ​நேரம் என்பதால் நிலை தடுமாறி அவர் கடலில் வீழ்ந்துள்ளார். அதன்பின்னர் 10 மணி நேரப் போராட்டத்திற்கு பின்னர் அந்த பகுதிக்கு வந்த குரேஷியாவின் பாதுகாப்பு கப்பல் ஒன்று அந்த பெண்ணை கண்டு மீட்டுள்ளது. கடலில் வீழ்ந்த பெண் மீட்கப்படும் காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை குரேஷிய பாதுகாப்பு அமைச்சு வௌியிட்டுள்ளது.

தனது அனுபவம் பற்றி அந்த பெண் கூறுகையில், “நான் கடலில் பத்து மணி நேரம் தத்தளித்துக் கொண்டிருந்தேன். இந்த அற்புதமான மனிதர்கள் என்னை மீட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் வீழ் இடத்திலிருந்து சுமார் 1300 மீட்டர் தொலைவிலேயே மீட்கப்பட்டதுடன், பின்னர் அவர் புலா நகருக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.