Aug 20

கர்நாடகாவில் மீண்டும் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் குடகு: பிரதமரிடம் குமாரசாமி விளக்கம்

கர்நாடகாவில் குடகு மாவட்டம் வெள்ள நிலவரம் குறித்து பிரதமர், ஜனாதிபதியிடம் முதல்வர் குமாரசாமி விளக்கினார். கர்நாடக மாநிலத்தில் குடகு  மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக கனமழை ெகாட்டி  வருகிறது. அபாயக் கட்டத்தை தாண்டி  நீர் நிரம்புவதால் அணைகளில்  இருந்து ெதாடர்ந்து பெருமளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மடிக்கேரி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. 

மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 1000 வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை  மீட்க  மிகவும் சிரமப்பட வேண்டி உள்ளது. குடகு மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியதால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாவட்டம்  முழுவதும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இங்கு இதுவரை 3,500 பேர் மீட்கப்பட்டு 31 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

முதல்வர் குமாரசாமி மீண்டும் குடகு மாவட்டத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று 2வது நாளாக வெள்ளச் சேதங்களை பார்வையிட்டார். பிரதமர் மோடி, கர்நாடக  முதல்வர் குமாரசாமியை போனில் தொடர்புக் கொண்டு குடகு மாவட்ட வெள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள  வெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் குமாரசாமியிடம் தொலைபேசியில்  தொடர்புக்  கொண்டு பேசினேன். கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனைத்து நிவாரணம் மற்றும்  மீட்பு பணிகளில் ஆதரவு அளிக்கும். வெள்ளபாதிப்பு பகுதியில்  சிக்கியுள்ளவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். 

இதேபோல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், முதல்வர் குமாரசாமியை போனில் தொடர்பு கொண்டு கர்நாடக வெள்ள நிலவரம் குறித்து விசாரித்தார். அவரிடம் குடகு மாவட்ட நிர்வாகம், மீட்பு குழுவினருடன் சேர்ந்து நிவாரண பணிகளை கவனித்து வருவதாக குமாரசாமி தெரிவித்தார்.