Aug 18

இலங்கையில் இரட்டையர்களைப் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து வளர்ப்பு பெற்றோர்!

ஸ்ரீலங்காவில் பிறந்து நெதர்லாந்து வளர்ப்புப் பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்ட இரட்டையர்களான சிறுவர்கள் தமது தாயாரை தேடிவருகின்றனர்.


தத்தெடுக்கப்பட்ட இரு சிறுவர்களும் தமது தாயை சந்திக்கும் ஆர்வத்தில் உள்ளதாக வளர்ப்பு பெற்றோரான நெதர்லாந்து தம்பதியினர் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் இல்லாத நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் 2010 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு சென்றிருந்த நிலையில் இரண்டு மாத குழந்தையாக இருந்த இரட்டையர்களான ஆண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர்.

தற்போது அந்த சிறுவர்கள் தமிழ் பெண்மணியான தமது தாயாரை சந்திக்க பெரும் ஆவலாக உள்ளனர். அதற்கான முயற்சியில் சிறுவர்களின் வளர்ப்பு பெற்றோரான நெதர்லாந்து தம்பதியினர் ஈடுபட்டுள்ளனர்.

தருச லக்மால், ஹிருச ஜயமால் என்று அழைக்கப்படும் அந்த இரு சிறுவர்களுக்கும் தற்போது எட்டு வயதான நிலையில் நெதர்லாந்தில் கல்வி கற்று வருகின்றனர்.

இரண்டு சிறுவர்களை தத்தெடுத்த தாய் சிறிய வயதில் நெதர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினால் 1981 ஆம் ஆண்டு தத்தெடுக்கப்பட்டவராவார்.

அவர் தனது சொந்த தாயாரை ஹிங்கிரிய பிரதேசத்தில் 2010 ஆம் ஆண்டு தேடிக் கண்டுபிடித்துள்ளார். அந்த மகிழ்ச்சி தான் தத்தெடுத்த பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாகும்.

இதனால் தனது கணவருடன் இணைந்து அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

இரு சிறுவர்களையும் பெற்றெடுத்த தாயார் ஒரு தமிழ் பெண்னாவார். தியோகா ராஜ் ஸ்ரீதேவி என்ற பெயருடைய குறித்த பெண் நீர்கொழும்பு கொச்சிக்கடை, வைக்கால் பிரதேசத்தில் அமைந்துள்ள ஓட்டுத் தொழிற்சாலையில் தொழில் செய்யும்போது இரண்டு குழந்தைகளையும் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி பெற்றெடுத்துள்ளார்.

அந்த குழந்தைகளை புத்தளம் பிரதேசத்தில் உள்ள மீகலாவே சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் ஒப்படைத்துள்ளார்.

அங்கு ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சிறுவர் திணைக்களத்தின் ஊடாக குறித்த நெதர்லாந்து தம்பதியினர் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சட்ட ரீதியாக தத்தெடுத்து தமது நாட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தியோகா ராஜ் ஸ்ரீதேவி என்ற பெயருடைய பெண் குளியாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தருச லக்மால், ஹிருச ஜயமால் ஆகியோர் தம்மை பெற்றெடுத்த தாயாரை சந்திக்க ஆவலாக உள்ளனர்.

எனினும் தாயின் நிழற்படம் அவர்களிடம் இல்லாத நிலையில் தாயின் பெயரை மாத்திரமே அறிந்து வைத்துள்ளனர்.

நீர்கொழும்பில் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாகவும் வாகன சாரதியாகவும் பணியாற்றும் அன்ட்ரூ சில்வா ஊடாக நெதர்லாந்து தம்பதியினர் பிள்ளைகளின் தாயாரை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தருச லக்மால், ஹிருச ஜயமால் மற்றும் அவர்களது வளர்ப்புப் பெற்றோரின் ஆசை நிறைவேறுமா?