Aug 18

புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு பெரு முக்கிய அறிவிப்பு!

அடையாள ஆவணங்கள் எவையுமின்றி, பெரு நாட்டிற்குள் நுழையும் வெனிசுவேலா நாட்டுப் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுமதிக்கப் போவதில்லையென பெரு ஜனாதிபதி மார்ட்டின் விஸ்கரோ தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டை போன்ற ஆடையாள ஆவணங்கள் எவையுமில்லாமல் நாட்டுக்குள் புகலிடம் கோரி வருபவர்களை இனிவரும் காலத்தில் தடைசெய்யப் போவதாக, நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலோஸ் மடுரோவினைக் கொலை செய்ய முயற்சிசெய்த குழுவுடன் தொடர்புபட்ட இரு வெனிசுவேலா பிரஜைகள் அந்தீஸ் மலைப்பகுதியில் இருப்பதாகவும் அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்குமாறும் கடந்த வாரம் வெனிசுவேலா குறிப்பிட்டிருந்தது. இதற்கு மறுப்புத் தெரிவித்த பெரு ஜனாதிபதி,    குறித்த மலைப்பகுதியில் வெனிசுவேலாவைச் சேர்ந்த யாரும் இல்லையென இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது பெரு நாடு முழுவதும் சுமார் 400,000 வெனிசுவேலா நாட்டு மக்கள் பரந்துள்ளதோடு அவர்களில் அதிகமானோர் அந்தீஸ் மலைத் தொடரினைக் கடந்தே பெரு நகரங்களை அடைந்துள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பெருவின் திட்டத்தை, அதன் அயல் நாடான ஈகுவடோரும் அமுல்படுத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.