Aug 18

ரொறன்ரோவில் கனமழை – வீதிகளில் வெள்ளம்: போக்குவரத்து பாதிப்பு!

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நேற்று (வெள்ளிக்கிழமை) பெய்த இந்த மழை காரணமாக அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில், மிட்லேண்ட் நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தமையால் ஸ்கார்பரோவிற்கான 3 ஆம் சேவையை நிறுத்தி வைப்பதாக ரொறன்ரோ டிரான்சிட் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், பொதுமக்களின் நன்மை கருதி, பேருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டதாக தெரிவித்த ஆணையகம், 1 மற்றும் 2 இல் சிறியளவிலான வெள்ளமே ஏற்பட்டதாகவும், இதனால் அப்போக்குவரத்து தொடர்ந்தும் சீராக இயங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது சீரற்ற வானிலை மேற்கு நோக்கி நகர்கின்ற நிலையில், 50 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்ய கூடும் என எதிர்வு கூறியுள்ள கனடா சுற்றுச்சூழல் நிலையம், தொடர் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.