Aug 18

இத்தாலியில் பாலம் இடிந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி!

இத்தாலியின் ஜெனோவா பிராந்தியத்தில் கடந்த புதன்கிழமை பாலம் இடிந்து வீழ்ந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு ஃபுளோரன்ஸ் நகரில் மிகவும்  உணர்வுபூர்வமாக  இடம்பெற்றுள்ளது.

ஃபுளோரன்ஸ் நகரின் பெக்சிலிகா த சன்டா குரொஸ் என்ற பிரபல ஆலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை)  பிரார்த்தனை இடம்பெற்றது.

பாலம் இடிந்து வீழ்ந்ததில் 39 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் 4 பேரின் இறுதிக்கிரியைகள் நேற்று இடம்பெற்றன. இதில் அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டர்.

உயிரிழந்த ஒருவரின் தந்தை கருத்துத்  தெரிவித்த போது, தன் மகன் இறக்கவில்லை என்றும், நாட்டு மக்களின் மீது அரசாங்கத்திற்கு அக்கறை இல்லாத காரணத்தால் தன் மகன் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்றும் விரக்தியுடன் குறிப்பிட்டார்.

உயிரிழந்த ஏனையோரின் இறுதிக்கிரியைகள் இன்று அரச மரியாதையுடன் இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை புறக்கணிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற நான்கு பேரின் குடும்பத்தாரும் இதனை புறக்கணித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளனர்.

பாலம் இடிந்து வீழ்ந்த விபத்தில் மேலும் சுமார் 15 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாலத்தின் கட்டமைப்பில் காணப்பட்ட கோளாறே விபத்திற்கு காரணமென நிபுணர்கள் கூறியுள்ளதோடு, இதனால் இத்தாலி அரசாங்கம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.