Aug 18

மோசமான வானிலை - வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற மோடி மீண்டும் கொச்சிக்கு திரும்பினார்

கேரளாவின் கொச்சி பகுதியில் மீண்டும் கனமழை பெய்துவருவதால், வெள்ள பாதிப்பை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்பினார்.

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்தடைந்தார். இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட கொச்சிக்கு சென்றார். 

அங்கிருந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடுவதற்காக ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றதும் அப்பகுதியில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.

ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் மீண்டும் கொச்சிக்கு திரும்பி தரையிறங்கியது. வானிலை சீரடைந்ததும் மோடி, வெள்ள பாதிப்புகளை பார்வையிட செல்வார் என தெரிகிறது.

கடந்த 8-ந் தேதி முதல் கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடி வரும் இரண்டாம் கட்ட பருவமழைக்கு இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.