Mar 15

ஆஸ்திரேலியா நாடு கடத்திய 25 அகதிகளும் சி.ஐ.டி. விசாரணையில்

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். நான்கு பெண்கள் உள்பட 25 அகதிகள் இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் (சிஐடி) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மலேசியாவிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயற்சித்ததாக கூறப்படுகின்றது.

அண்மையில் ஆஸ்திரேலியா சென்றிருந்து இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் பயமின்றி நாடு திரும்பலாம் எனத் தெரிவித்த பின்னர் முதல் முறையாக இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை ஜனவரி 2017 கணக்குகள்படி, 86 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ளனர். 2012 க்கு பின்னர் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலியா, கடல் வழியாக வரும் அகதிகளை அந்நாட்டிற்கே தொடர்ந்து திருப்பியனுப்பி வருகிறது. அப்படி கடந்தாண்டு 12 அகதிகளோடு வந்த ஒரு இலங்கை படகு திருப்பி அனுப்பப்பட்டது. 2014ல் 153 தமிழ் அகதிகளோடு வந்த படகும் அப்போது திருப்பி அனுப்பப்பட்டது.

வரும் அக்டோபர் மாதத்திற்குள் மனுஸ்தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமை ஆஸ்திரேலியா மூடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், மேலும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகள் நாடு கடத்தப்படக்கூடும் என சொல்லப்படுகின்றது.