Jun 06

போலிக் குடிவரவு முகவர்களைக் தடுத்து நிறுத்த அரசிற்கு அழுத்தம்

கனடாவில் வாழ அல்லது தொழில் செய்ய விரும்புவோரைக் குறிவைக்கும், மோசடியான குடிவரவு முகவர்களைக் கண்டுபிடித்துத் தண்டனை வழங்குமாறு லிபரல் அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் தலைவர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

பதிவு செய்யப்படாமல் இயங்கும் குடிவரவு முகவர்கள் தொடர்பாகக் கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்ற செயற்குழு ஒன்று செயலமர்வு ஒன்றை நடாத்தியது.

இச்செயற்குழுவின் அமர்வுகளின் பின்னர், இவ்வாறான மோசடியான குடிவரவு முகவர்கள் தொடர்பாகப் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குடிவரவு முகவர்களை ஒழுங்கிசைவுபடுத்தும் அமைப்பை மறுசீரமைத்தல், கனமான தண்டனைகளை விதித்தல் போன்ற நடவடிக்கைகளும் கருத்திற் கொள்ளப்படுகின்றன.

மோசடிக் குடிவரவு முகவர்களிடம் பெருந்தொகையான  பணத்தை இழந்த பலர் இந்த நாடாளுமன்ற செயற்குழுவின் முன்னிலையில்  சாட்சியமளித்தனர். ஐம்பது பேர் இவ்வாறு சாட்சியமளித்தனர், 24 எழுத்துமூல வாக்குமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டன,.

பழமைவாதக் கட்சியின் குடிவரவு விமர்சகர் மிசேல் ரெம்பெல் இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், குடிவரவு முகவர்களை ஒழுங்கிசைவுபடுத்தும் முறை முற்றாகச் செயல் இழந்துள்ளதாகவும், இவர்களால் ஏமாற்றப்பட்ட பலரின் “பயங்கரமான” கதைகள், இம்முறையில் தீவிரமான சீரமைப்புக்கள் தேவை என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

2011 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட குடிவரவு முகவர்களை ஒழுங்கிசைவுபடுத்தும் அமைப்பான Immigration Consultants of Canada Regulatory Council (ICCRC) இன் ஆளுகை தொடர்பான பாரிய குறைபாடுகள், இவ்வமைப்பினால்  குடிவரவு முகவர்களை முறையாக மேற்பார்வை செய்யமுடியுமா என்ற கேள்வியை உருவாகியுள்ளதாகவும் ரெம்பெல் மேலும் தெரிவித்தார்.