Aug 17

இரவோடு இரவாக காணாமல் போன ஊரும் குளமும்; முல்லைத்தீவில் அதிர்ச்சி!-படங்கள்


முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மந்துவில் பிரதேசத்திலுள்ள குளம் ஒன்றை இரவோடு இரவாக மூடிவிட்டு அடாத்தான முறையில் கோவில் அமைத்துள்ளதாக பிரதேச மக்கள் குறைகூறுகின்றனர்.

விவசாயத்துக்கென நம்பியிருந்த தமது குளத்தின் ஒரு பாகத்தை மூடிவிட்டதாகவும் அந்த மூடப்பட்ட பாகத்தை மீட்டுத் தருமாறும் குறித்த மக்கள் கவலையோடு தெரிவித்துள்ளனர்.

மந்துவில் பிரதேசத்திலுள்ள மணற்குளம் நீண்ட காலமாக மக்களின் விவசாயத் தேவைகளுக்காக உபயோகிக்கப்பட்டுவந்ததாகக் கூறும் ஊர் மக்கள் அந்தக் குளத்தின் ஒரு பாகத்தை மூடிவிட்டு சிவன் ஆலயம் ஒன்றைக் கட்டி சிவநகர் என பெயர் சூட்டியுள்ளதாக விசனம் தெரிவிக்கின்றனர்.



மந்துவில் கிராமம் எவ்வாறு சிவநகர் ஆனது? என்ற கேள்வியையே மேற்படி மக்கள் முன்வைத்துள்ளனர்.

குறித்த குளத்தில் இரவோடு இரவாக மண்ணைக் கொட்டி நிரப்பியதனால் குளம் காணாமல் போனதாகக் கூறும் மக்கள் இவ்வாறான செயல் எதற்காக மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.

இதுதொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உள்ளிட்ட தரப்பினர்க்கு அறிவிக்கப்பட்டபோதும் அந்தத் தரப்பினர் பக்கச் சார்பாக நடந்துகொள்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக அந்தக் குளம் ஒரு குட்டையே தவிர குளம் அல்ல என அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கூறியதாகவும் எனினும் குளம் என்பதற்கான உரிய ஆதாரத்டை தாம் காட்டியுள்ளதாகவும் மக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் மிகவும் அநீதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு உரியவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதனால் ஊடகங்கள் வாயிலாக இந்த விடயத்தினை வெளியுலகிற்கு கொண்டுவருவதாக அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.